X

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – பிசிசிஐ, இலங்கை கிரிக்கெட் போர்டு பேச்சுவார்த்தை

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்திடம் பிசிசிஐ போட்டியை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை ஆகியவற்றிற்கு இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

உலகக்கோப்பைக்காக ஐசிசி-யிடம் மைதானத்தை 15 நாட்களுக்கு முன் ஒப்படைக்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும். மேலும் ஷார்ஜா, அபு தாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்களே உள்ளன. ஆடுகளங்கள் விளையாட விளையாட தொய்வுடைந்துவிடும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு போட்டியை இலங்கையில் நடத்ததலாமா? என்ற சிந்தனையும் பிசிசிஐ நினைப்பில் ஓடியது. இதுகுறித்து பிசிசிஐ- இலங்கை கிரிக்கெட் போர்டு ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.

இலங்கையில் உலகக்கோப்பை தொடரை நடத்தினால், மைதானத்தை ஒப்படைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என பிசிசிஐ நினைத்திருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பில் மட்டும் மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளது.