டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன

8-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2021 போட்டியின் முடிவின்படி ‘டாப் 11’ அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 4 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.

இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் இந்த இரு அணிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்றதால் வாய்ப்பை பெற்றன.

ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது. உலகக்கோப்பையில் விளையாடும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர்-12)விளையாடும்.

முதல் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 நாடுகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools