ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், “டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கோலி (361) மற்றும் டூ பிளசிஸ்க்கு (232) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (226) 3-ம் இடத்தில் உள்ளார்.
இந்த சீசனில் சிறந்த பினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஆனால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காயத்திலிருந்து மெதுனு பார்முக்கு திரும்பிய பண்ட், சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல். ராகுல் ஆகியோர் அந்த போட்டியில் உள்ளனர்.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கார் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை மதித்து நடப்பேன். ஆனால் நான் 100% தயாராக உள்ளேன் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.