X

டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் பரிசீலிக்கப்படும் – ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் தொடர்ந்து ரன் குவியுங்கள். வாய்ப்பு தானாகவே வரும். ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் போன்ற வீரர்கள் அதில் சிறப்பாக விளையாடி தான் இப்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் வகிக்கிறார்கள். எனவே தேசிய அணிக்கான வாய்ப்பு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து ரன் வேட்டை நடத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

சஞ்சு சாம்சன் மிகவும் திறமைசாலி. ஐ.பி.எல். மற்றும் வேறு வகையிலான போட்டிகளில் அவர் விளையாடும் போதெல்லாம், எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய பேட்டிங்கை அவர் வெளிப்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். அவரது ‘பேக்புட்’ பேட்டிங் ஸ்டைல் சூப்பராக இருக்கும். நிறைய வீரர்களுக்கு திறமை இருக்கிறது. ஆனால் அந்த திறமையை சிக்கலான கட்டத்தில் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

சஞ்சு சாம்சனை பொறுத்தவரை தனது அதிகபட்ச திறமையை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். எங்களுடன் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு நாங்கள் நம்பிக்கையை அளிக்கிறோம். நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணித் தேர்வுக்கு அவரது பெயரை பரிசீலிப்போம். அதனால் தான் அவர் இப்போது அணியில் இருக்கிறார்.மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். தற்சமயம் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பணிச்சுமை என்பது எப்போதும் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்தது. தினசரி அடிப்படையில் இதை பார்க்க வேண்டும். ஒரு வேளை ஓய்வு தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக இன்னொரு வீரர் வருவார். பும்ரா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் ஆகியோரை பற்றி பேச வேண்டும் என்றால் அவர்கள் இந்திய அணியின் வெற்றிகளில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறார்கள். அதே நேரத்தில் அவர்களை வருங்கால கேப்டன்களாகவும் பார்க்கிறோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.