தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு தயாரானபோது காயத்தால் வெளியேறினார். அந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்கா மோசமான தோல்வியை தழுவியது.
காயத்தில் இருந்து மீண்ட ஸ்டெயின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார்.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் முதன்முறையாக கலந்து கொண்டு விளையாடினார்.
இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான தென்ஆப்பிரிக்காவின் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் கடைசியில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்கா அணியின் இடம் பிடித்து வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தும் ஆர்வத்தில் உள்ளார்.
இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘என்னுடன் கடைசியாக அவர்கள் நடத்திய கலந்துரையாடலை வைத்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நான் இடம் பெறுவேன் என்பது தெரிய வந்தது.
எனக்கு இருண்டு வாரங்கள் சிறப்பான ஓய்வு கிடைத்துள்ளது. அதன்பின் அணிக்கு நேராக திரும்புவேன். ஒருநாள் போட்டியிலும் வளம் வருவேன். ஆனால் எத்தனை போட்டிகளில் விளையாடுவேன் என்று தெரியாது. ஆனால் உறுதியான டி20 கிரிக்கெட்டில் இருப்பேன்.
வீரர்கள் அறையில் என்னை போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது முக்கியமானது. ரபாடா (வயது 24) அணியின் பந்து வீச்சு குழுவை மிகவும் இளம் வயதில் வழி நடத்திச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து வரும் வீரர்கள் அவரை விட இளமையாக இருக்கிறார்கள். இதனால் அனுபவம் மிக்க பந்து வீச்சாளர் ஒருவர் தேவை. அப்போது அவர் தனிநபராக மட்டும்தான் அங்கு இருக்கவில்லை என்பது அவருக்கும் தெரியும்.
டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது இலக்கு. தற்போது என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியாக தொடங்கி இருக்கிறேன். டெஸ்ட் போட்டியை விட டி20-யில் நான்கு ஓவர்கள் வீசுவது மிகவும் எளிதானது.
அதனால் உலக கோப்பையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். வீரர்கள் தேர்வு எப்படி செல்கிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன்.
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்குகிறது.