Tamilசெய்திகள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு மோசடி! – பணம் கைமாறியது குறித்து சித்தாண்டி வாக்கு மூலம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தினமும் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். இந்த வழக்கில் போலீஸ் துறையை சேர்ந்த போலீஸ்காரர்கள் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

ஏற்கனவே சென்னையில் ஆயுதப்படையில் வேலை பார்த்த முத்துக்குமார் என்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சென்னை போலீஸ்காரர் சித்தாண்டியும் சிவகங்கை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ்காரர் சித்தாண்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பூபதி என்ற இன்னொரு போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டார்.

சித்தாண்டியும், பூபதியும் இணைந்து முறைகேடாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வு மூலம் ஏராளமான பேரை அரசு வேலைக்கு சேர்த்துள்ளனர். மேலும் சில போலீஸ்காரர்கள் கைதாவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் போலீஸ்காரர் சித்தாண்டி கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

இடைத்தரகர் ஜெயக்குமார்தான் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை வேலைக்கு சேர்த்து விட்டார். நான் ரூ.2 கோடி அளவுக்கு பணம் வாங்கிக்கொண்டு, 22 பேரை அரசு வேலையில் சேர்த்து விட்டேன். குரூப்-4 தேர்வில் 15 பேரும், குரூப்-2ஏ தேர்வில் 7 பேரும் அதில் அடங்குவார்கள். நான் ஜெயக்குமாரிடம் நேரடியாக இந்த பணத்தை கொடுக்கவில்லை.

எனது நண்பரும், போலீஸ்காரருமான முத்துக்குமாரிடம் நான் பணத்தை கொடுத்தேன். அவர் விழுப்புரம் மாவட்டம், அரியூர் கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தி என்பவர் மூலம் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்தார். கிராம நிர்வாக அதிகாரி சக்திக்கும் இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு உண்டு. ஒருவேளை வேலை கிடைக்காமல் போனால், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதி ரூ.55 லட்சத்தை கொடுத்து 5 பேரை வேலைக்கு சேர்த்து விட்டதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாருடன் இணைந்து செயல்பட்டுள்ள, கிராம நிர்வாக அதிகாரி சக்தியும் கைது செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *