டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைக்கேடு – இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் 2வது முறையாக சிபிசிஐடி விசாரணை
தமிழ்நாடு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 50-க்கும் மேற்பட்டோர் முதல் 100 இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்றனர்.
இதில் பலர் முறைகேடாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன், இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணை தீவிரம் அடைந்தது. அவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 தேர்வு மையங்களில் இருந்து தேர்வுதாள்களை கொண்டு வரும்போது அதனை நடுவழியில் மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையில் நடந்து இருப்பது தெரிய வந்தது. இதன்பேரில் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலூர் மற்றும் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2 பேரையும் 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமேசுவரம், மதுரை மாவட்டம் மேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
ராமேசுவரம் நகராட்சி பஸ் நிலையத்துக்கும், கொந் தம்புளி பஸ் நிறுத்தத்திற்கும் இடையில் உள்ள ஒரு விடுதிக்கு ஜெயக்குமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் தங்கி இருந்து மோசடி திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் ஆகியோரை மதுரை மாவட்டம் மேலூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்குள்ள புறநகர் சாலையில் செயல்பட்டு வரும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்ப்ட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி. விடைத்தாள்களை ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும்போது இந்த இடத்தில் வைத்துதான் விடைத்தாள்களை மாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக 2 பேரும் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினர். இதன் பின்னர் அவர்கள் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.