Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் பிளே ஆப் சுற்று – சேலம், கோவை இன்று மோதல்

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

டி.என்.பி.எல். போட்டியில் நேற்றுடன் 18 ஆட்டங்கள் முடிவடைந்தது. கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் தலா 8 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை தலா 4 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 6-வது இடங்களில் உள்ளன. சேலம் அணி 2 புள்ளிகளுடன் இருக்கிறது. திருச்சி அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று இவு 7.15 மணிக்கு 19-வது லீக் ஆட்டம் நடக்கிறது. இது ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை கிங்ஸ் அணி சேலத்தை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி திருப்பூர் தமிழன்ஸ் (70 ரன்), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 விக்கெட்), பால்சி திருச்சி (6 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (59 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி திருச்சியை மட்டும் 5 விக்கெட்டில் வென்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (52 ரன்), நெல்லை ராயல் கிங்ஸ் (5 விக்கெட்) மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.