Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 81 ரன்களும், உதிரசாமி சசிதேவ் 65 ரன்களும் குவித்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை. சாத்விக் 33 ரன்களும், சந்தோஷ் ஷிவ் 59 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் அளித்தனர். ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. நிரஞ்சன் 11 ரன், நிதிஷ் ராஜகோபால் 9 ரன்கள் என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.

கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய ஆதித்ய கணேஷ் 28 ரன்கள் சேர்த்தார். முகமது அத்னன் கான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் திருச்சி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களே எடுத்தது.

இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஹரிஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.