X

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை நெல்லையில் தொடங்குகிறது

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 31-ந்தேதி வரை இந்த போட்டிகள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

சேலம், கோவை ஆகிய இடங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல். போட்டிகள் நடக்கிறது. ஸ்டேடியம் புனரமைப்பு காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முறை போட்டிகள் நடைபெறவில்லை.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை கிங்ஸ் , 2018-ம் ஆண்டு சாம்பியனான சீசம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். ஜூலை 24-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகிறது.’எலிமினேட்டர்’ ஆட்டம் 26-ந்தேதியும், ‘குவாலிபையர்’ ஆட்டம் 27-ந்தேதியும் சேலத்தில் நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ போட்டி 29-ந்தேதியும் இறுதிப்போட்டி 31-ந்தேதி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்திலும் நடக்கிறது.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும். நாளைய தொடர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. இதற்காக கவுசிக் காந்தி தலைமையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

நேற்றைய பயிற்சிக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் ஜெகதீசன், அலெக்சாண்டர் ஆகியோர் கூறுகையில், ‘நெல்லையில் முதல் ஆட்டத்தில் விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இந்த சீசனில் கார்த்திக், மதனகுமார் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே வெற்றி பெற்ற அணி டி.என்.பி.எல். கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் 14 பேர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆடினார்கள். இதனால் டி.என்.பி.எல். போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஏலத்தில் அதிகமான வாய்ப்பு கிடைக்கும்.