டி.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சியை வீழ்த்தி நெல்லை வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் திருச்சி – நெல்லை அணிகள் மோதியுள்ளன. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு ஏற்கனேவே தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ராஜ்குமார் 2 ரன்களிலும், சரண் ரன் பூஜ்ஜியம் ரன்னிலும் அவுட்டாகினர். திருச்சி அணி 6 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் போட்டி சிறது தடைபட்டு 19 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார். அவர் 53 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 96 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. அப்போது மழை குறிக்கிட்டதால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி, நெல்லை அணி 16 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
மழை மீண்டும் குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்டம் சற்று தாமதமாகவே தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அஜித்தேஷ் குருசுவாமி அரை சதம் அடித்து 56 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து நிதிஷ் ராஜகோபால் 35 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் ,11.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.