டி.என்.பி.எல் கிரிக்கெட் – திருப்பூரை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி

7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடைபெற்றது. டி.என்.பி.எல். தொடரின் 20-வது லீக் ஆட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. சாய் கிஷோர் 45 ரன்னும், துஷார் ரஹேஜா 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆடிய விஜய சங்கர் 43 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. விமல் குமார் 14 ரன்னும், பூபதி குமார் 14 ரன்னும் எடுத்தனர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிவம் சிங், ஆதித்ய கணேஷ் ஜோடி அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஷிவம் சிங் 74 ரன்னும், ஆதித்ய கணேஷ் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இறுதியில், திண்டுக்கல் அணி 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports