டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் நேற்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது.
கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகியது. இதில், அதிகபட்சமாக துஷார் ரகாஜே 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, விஷால் வைத்யா 16 ரன்களும், அஜித் ராம் 11 ரன்களும், ராஜேந்திர விவேக் 6 ரன்களும், என்எஸ் சத்துர்வேத் 4 ரன்களும் எடுத்தனர்.
பால்சந்தர் அனிருத் 3 ரன்களும், விஜய் சங்கர் 2 ரன்களும், கணேஷ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணி 12 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தது. இதில் புவனேஷ்வரன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மணிகண்டன் 8 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில், திருப்பூர் தமிழன் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.