6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார். ஆதித்யா 26 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் மதுரை வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் திருச்சி அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது.
இறுதியில், திருச்சி அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சந்தோஷ் ஷிவ் 31 ரன்னும், அமித் சாத்விக் 23 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் மதுரை அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது. மதுரை அணி சார்பில் ஜெகதீசன் கவுசிக் 4 விக்கெட்டும், கிரண் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.