டி.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது. இதில் ரூபி திருச்சி வாரியர்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சேப்பாக்கம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. ராதாகிருஷ்ணன் 82 ரன்னும், சதீஷ் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
நிதிஷ் ராஜகோபாலுடன் ஜோடி சேர்ந்த ஆதித்ய கணேஷ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய ராஜகோபாலும், ஆதித்ய கணேஷும் அரை சதமடித்து அசத்தினர். நிதிஷ் ராஜகோபால் 55 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.
கடைசி 2 ஓவரில் திருச்சி அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது.கடைசி ஓவரின் 5வது பந்தில் வெற்றியை ருசித்தது திருச்சி அணி.
இறுதியில், திருச்சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆதித்ய கணேஷ் 66 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13-ம் தேதி மோதுகிறது.