டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மதுரை அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்ரீ அபிஷேக் மட்டும் இரட்டை இலக்கை ரன்னை (21) எட்டினார். நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதேபோல் சரவணன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக பாபா அப்பரஜித் 32 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஜகதீசன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்களும், சஞ்சய் யாதவ் 9 ரன்களும், சசிதேவ் 6 ரன்களும், பிரதோஷ் பவுல் 3 ரன்களும் எடுத்தனர்.
18-வது ஓவரில் பாபா அப்பரஜித் மற்றும் ஹரிஷ் குமார் களத்தில் இருந்தனர். இருவரும் 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடினர். இதில், அப்பரஜித் 33 ரன்களுடனும், 6 ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து, ஹரிஷ் குமார் 3 ரன்களிலும், மதன் குமார் மற்றும் ராமலிங்கம் ரோஹித் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக விளையாடிய ராஹில் ஷா 2 ரன்களும், சிலம்பரசன் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 129 ரன்களை எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.