Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – சேலம் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கோவையில் நேற்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் பிரதோஷ் பால் அதிரடியாக ஆடினார். அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜெகதீசன் 35 ரன்கள், பாபா அபராஜித் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஹரிஷ் குமார் 8 ரன்களிலும், ராஜகோபால் சதீஷ் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். சஞ்சய் யாதவ் 31 ரன்களுடனும், உதிரசாமி சசிதேவ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் சன்னி சந்து 2 விக்கெட் கைப்பற்றினார். அபிஷேக் தன்வார், மோகித் ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்கியது.

சேப்பாக் அணியின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. இறுதியில் சேலம் அணி 9 விக்கெட்டுக்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றது.

முகமது அட்னன் கான் மட்டும் தனி ஆளாகப் போராடி 47 ரன்கள் எடுத்தார். சேப்பாக் அணியின் பிரதோஷ் பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.