Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.
முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.