டி.என்.பி.எல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி திருச்சி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் விளையாடின.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கவுசிக் 8 ரன்களிலும், ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. உதிரசாமி சசிதேவ் 2 ரன்களும், ஜெகநாத் சீனிவாஸ் 14 ரன்களும், ஹரிஷ் குமார் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சதீஷ், 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

சோனு யாதவ் (3), சாய் கிஷோர் (3), மதிமாறன் சித்தார்த் (14) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.

திருச்சி அணி தரப்பில் சரவணகுமார் 3 விக்கெட் எடுத்தார். அந்தோணி தாஸ் 2  விக்கெட், சுனில் சாம், ரகில் ஷா, மதிவண்ணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சந்தோஷ் ஷிவ் 25 ரன்னும்,  அமித் சாத்விக் 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆதித்ய கனேஷ் 24 ரன்கள் எடுத்தார்.

நிதிஷ் ராஜகோபால் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools