டி.என்.பி.எல் இறுதிப் போட்டி – கோவை, நெல்லை அணிகள் இன்று மோதல்

7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் பிளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதிச்சுற்றில் (குவாலிபயர் -1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சனிக்கிழமை நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. நெல்லையில் நடந்த 2-வது தகுதிச்சுற்றில் (குவாலிபயர்-2) நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், டி.என்.பி.எல். இறுதிப்போட்டி நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ், அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டி.என்.பி.எல். கோப்பையைக் கைப்பற்றப் போவது கோவையா, நெல்லையா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது.

கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. அதற்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது.

தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை ராயல் கிங்ஸ் உள்ளது. கோவையை லீக் ஆட்டத்தில் வென்றுள்ளதால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு நெல்லை ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports