டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்! – அடுத்த மாதம் சென்னை வருகிது
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, முதல் கட்டத் திட்டமாக விமானநிலையம்-விம்கோ நகா், சென்னை சென்டிரல் – பரங்கிமலை என 2 வழித்தடங்களில், 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக ரூ,63 ஆயிரத்து 246 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையில் 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையில் 4-வது வழித்தடத்திலும், மாதவரம்- சோழிங்கநல்லூா் வரையில் 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. டிரைவர் இல்லாத 62 மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் இயக்குவதற்காக இந்த டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் அடுத்த மாதம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட முதல் ரெயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைகளை கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவும், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது. இந்த ரெயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். ஒரு ரெயிலில் ஆயிரம் பேர் வரையில் பயணம் செய்யலாம்.
அந்த வகையில் இடவசதியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. செல்போன் மற்றும் கம்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ள தண்டவாளங்களில் ரெயில் இயக்கம் குறித்த அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளது. கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.