ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்து தோல்வியில் இருந்து தப்பியது.
407 ரன் இலக்கு என்ற நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 5-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அவர் 97 ரன்னிலும், புஜாரா 77 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 272 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.
இதனால் எஞ்சிய 5 விக்கெட்டுகளை இந்தியா எளிதில் இழந்து தோல்வியை அடைந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 6-வது விக்கெட்டான விகாரி-அஸ்வின் ஜோடி மனம் தளராமல் கடைசி வரை போராடி தோல்வியில் இருந்து தப்பி ஆட்டத்தை டிரா செய்தது.
கடைசி வரை இந்த ஜோடியை ஆஸ்திரேலிய பவுலர்களால் பிரிக்க முடியாமல் நொந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு இருவரும் மிகவும் கவனத்துடன் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டத்தின் முடிவில் இந்தியா 130 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்தது. விகாரி 161 பந்துகளில் 4 பவுண்டரியுடன், 23 ரன்னும், அஸ்வின் 178 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 39 ரன்னும் எடுத்தனர்.இருவரும் இணைந்து 259 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் எடுத்தனர்.
சிட்னி டெஸ்ட் டிரா ஆனது வெற்றிக்கு நிகரானது என இந்திய அணி பொறுப்பு கேப்டன் ரகானே கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியில் விகாரியின் சிறப்பான இன்னிங்சை அனைவரும் பார்த்தோம். இதில் அவர் ஆடிய விதம் 2019-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விகாரி அடித்த சதத்தை விட சிறந்த ஒன்றாகும்.
காயமடைந்த பிறகும் அவர் போராடி அணியை தோல்வியில் இருந்து மீட்டு உள்ளார். கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் அவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த டிராவானது வெற்றிக்கு நிகரானது.
இதற்கான அனைத்து பாராட்டுக்களும் விகாரி, அஸ்வின், ரிஷப்பண்ட், புஜாரா ஆகியோரை சேரும். ரிஷப்பண்ட் மிக அற்புதமாக ஆடினார். ஆனால் துரதிருஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.