Tamilசெய்திகள்

டிடிவி தினகரன் – எடப்பாடி பழனிசாமி பேச்சுகளில் திடீர் மாற்றம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்தவர்கள்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் எழுந்த நீயா? நானா? போட்டியால் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள். கட்சி எடப்பாடி பழனிசாமி வசமானது.

இனி நமக்கு அங்கு சரிப்பட்டு வராது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் டி.டி.வி. தினகரன். அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு என்று தனிக் குழுவாக செயல்படத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவோ எப்படியாவது அ.தி.மு.க. பக்கம் போக வேண்டும் என்ற முடிவோடு கட்சியை ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று புறப்பட்டார். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சிகளும் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை கை கொடுக்க வில்லை.

இந்த நிலையில் தான் வரப்போகும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றிக்கு தலைவர்கள் ஒன்றிணையா விட்டாலும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதை அமித்ஷா அனைத்து தலைவர்களிடமும் தனித்தனியாக போனில் உரையாடி விளக்கினார்.

கோபதாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு தேர்தலில் வெற்றி பெற, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த சமரச யோசனைகள் தலைவர்களிடையேயும் வேலை செய்யத் தொடங்கி இருக்கிறது.

அ.தி.மு.க.வின் கொடி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அ.தி.மு.க. கொடி போல அ.ம.மு.க. கொடியை வடிவமைத்ததற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. பொதுச் செலாளர் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார். அதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீலும் ஒப்புதல் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். தினகரன் மீதான வழக்கை வாபஸ் பெற எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதே போல் டி.டி.வி. தினகரனின் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நேற்று அளித்த பேட் டியில் தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலுப்பட வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல் பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது. கூட்டணியில் எல்லோரையும் அனுசரித்து செல்வோம்.

2021 வரை பா.ஜனதா கூட்டணியில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி, கட்சியை அழிந்து விடாமல் பாதுகாக்க இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்ட ணியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளின் நிலைப்பாடும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்று கூறி உள்ளார். ஒரே கூட்டணியில் அணி வகுத்து இருக்கும் சூழ்நிலையில் இருவரின் பேச்சிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் அடுத்து என்ன என்று தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.