கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இந்த படம் ரம்ஜான் பண்டிகையில் வெளியாகும் என்று தெரிகிறது.
இதுபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக ஒடிடி தளத்திலேயே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் நேரடியாக ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். படங்களை ஒடிடி தளங்களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.