கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தற்போது பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டார். அந்த கதாபாத்திரத்தில் பிரபு நடிப்பார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தேர்வான நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்துக்கு தங்களை மாற்ற கடும் பயிற்சிகள் எடுத்து வருகிறார்கள்.