டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி சார்பில் 380 பக்கங்கள் கொண்ட விரிவான பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கொரோனா தடுப்பூசிக்கான தேசிய திட்டத்தை மத்திய அரசு மே மாதம் தொடங்கி தொடர்ந்து மீளாய்வு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான ஜூன் 21-ந் தேதி அன்றைய திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி அதை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் 18 வயதானவர்களுக்கு இலவசமாக செலுத்தப்படும்.

தற்போதைய நிலையில்மத்திய அரசு மொத்தம் 35.6 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. மே முதல் ஜூலை மாத வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மேலும் கூடுதலாக 16 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். இதன்படி ஜனவரி முதல் ஜூலை வரை 51.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 94 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த 186 முதல் 188 கோடி வரையிலான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும்.

கொரோனா தடுப்பூசிகளை செலுத்த மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools