ஆந்திர மாநிலம், நெல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் தனது செல்போனில் டிக் டாக் செய்து வந்தார். இவரது டிக் டாக்கை கண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாலிபருடன் நட்பாக பேசி பழகினார். இருவரும் தினந்தோறும் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையெடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதேபோல் கடப்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் வாலிபரின் டிக் டாக்கில் மயங்கி அவரை காதலிக்க தொடங்கினார். வாலிபரும் 2 பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணை வாலிபர் திருமணம் செய்தார்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம் வாலிபர் சிறிது நாட்கள் பேசாததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வாலிபரின் வீட்டிற்கு வந்தார். அப்போது வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதால் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன் அதனால் என்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாலிபரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஏற்கனவே திருமணம் செய்த முதல் மனைவியிடம் நடந்தவற்றை வாலிபர் கூறியிருந்ததால் 2-வது திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து விசாகப்பட்டினம் இளம்பெண்ணை வாலிபர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். டிக் டாக் செயலி மூலம் 2 பெண்களை மயக்கி திருமணம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.