டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் விவகாரம் – மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம்

சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான செயலியான டிக் டாக்குக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவிலும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது. அதன்படி, டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

எனினும், டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால் பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்ய நாதெள்ளா சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools