X

டிக்கெட் விலை உயராது – திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்படிருந்த திரையரங்குகள், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: “தமிழகத்தில் 1,112 திரையரங்குகள் உள்ளன. அரசு வழிகாட்டுதலின் படி திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படும். திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. வழக்கமான காட்சிகள் இருக்கும். பொதுமக்களின் வருகையை பொறுத்து காட்சிகள் மாற்றி அமைக்கப்படும். திரையரங்குகளுக்கு கடந்த ஊரடங்கு தளர்வின்போது பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு தந்தனர். அதுபோல் இந்த முறையும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் திரையரங்குகளுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளதால், பொதுமக்கள் அச்சமின்றி திரையரங்கிற்கு வந்து தங்களுக்கு பிடித்த படங்களை பார்த்து ரசிக்கலாம்”. இ்வ்வாறு அவர் கூறினார்.