டிக்கெட் இருந்தும் அபராதம் கட்டிய ரெயில் பயணிகள்!

சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் ரெயில் நிலையங்களில் கடைப்பிடிக்கும் விதிமுறைகள் தெரிவது கிடையாது. பிளாட்பாரத்துக்குள் நுழைந்தால் டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்யக்கூடாது என்ற இரண்டு மட்டும் எல்லோருக்கும் தெரியும்.

சில நேரங்களில் அறியாத தவறுகளை தெரியாமல் செய்து பயணிகள் திண்டாடுவது உண்டு. அந்த வகையில் நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிப்பதற்காக ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் டிக்கெட் எடுத்துள்ளார்கள்.

மாலையில் புறப்படும் ரெயிலுக்கு முன் கூட்டியே வந்து விட்டதால் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் பிளாட்பாரம் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்ததும் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்து ஓய்வு எடுத்து உள்ளார்கள்.

அங்கு வந்த 2 பெண் டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களிடம் டிக்கெட்டை கேட்டு இருக்கிறார்கள். ராமேஸ்வரம் ரெயிலுக்கு எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை அவர்கள் காட்டியதும், இந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு இந்த பிளாட்பாரத்துக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அந்த பயணிகளுக்கு இந்த விவரம் தெரியாது. எங்களுக்கு இதெல்லாம் தெரியாது மேடம் என்று அவர்கள் கூறிய பிறகும் டிக்கெட் பரிசோதகர்கள் கேட்டபாடில்லை. அபராதம் கட்டியே தீர வேண்டும் என்றதும், பெண் பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தெரியாமல் செய்த தவறுக்கு ஏன் அபராதம் கட்ட வேண்டும். குறைந்தபட்சம் மன்னித்தாவது விடலாமே என்று கேட்டும், கெஞ்சியும் அந்த டிக்கெட் பரிசோதகர்கள் கொஞ்சம்கூட காதில் வாங்கவில்லை. இதனால் சுமார் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது. அங்கு வந்த பயணிகளும் தெரியாமல்தானே வந்திருக்கிறார்கள். மன்னித்து விட்டால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனாலும் அவர்கள் விடவில்லை. கடைசியில் ரூ.1040 அபராதம் கட்டி விட்டு சென்றார்கள். வழிச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை அபராதம் செலுத்திவிட்டு விழி பிதுங்கியபடி அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools