டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இந்த தேர்வுக்கான மாதிரி விடைப்பட்டியலில் பல விடைகள் தவறாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மீது வழக்கு தொடர்ந்தார். கேள்வித்தாள் குளறுபடி மற்றும் வெளிப்படையின்மை ஆகிய காரணங்களால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.

விசாரணையின்போது, கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. அத்துடன், நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மனுதாரர் உள்ளிட்ட மனு அளித்த அனைவருக்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி கூறியது. தவறான விடைகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கினாலும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நடந்த வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்ற டிஎன்பிஎஸ்சியின் வாதத்தை ஏற்ற உயர் நீதிமன்றம், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news