டிஎன்பிஎல் கிரிக்கெட் – மதுரையை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 5-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் ஏதிரணியின் பந்து வீச்சை சிதறடித்து அரை சதம் அடித்தனர். நிஷாந்த் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறு முனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 51 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை அணி தரப்பில் அந்த அணியின் ரஹில் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியின் தொடக்க வீரர்கள் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். கார்த்திக் 24 ரன்களிலும் சரத் ராஜ் 26 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் திண்டுக்கல் அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் தரப்பில் அந்த அணியின் சிலப்பரசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.