தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 8-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபினவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, தூத்துக்குடி அணியின் தொடக்கவீரர்களாக அக்ஷய் ஸ்ரீனிவாசன் மற்றும் செந்தில் நாதன் களமிறங்கினர். செந்தில் நாதன் (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரீனிவாசனுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் சிவா கோவை வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர். ஸ்ரீனிவாசன் 11 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 31 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய அணியின் கேப்டன் சிவா 21 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 44 ரன்கள் குவித்தார்.
இறுதியில், அதிரடியாக ஆடிய அந்த அணியின் சரவணன் 12 பந்துகளில் 29 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 13 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது.
கோவை கிங்ஸ் தரப்பில் அந்த அணியின் அந்தோணி தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாருக்கான், அபினவ் முகுந் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலே தூத்துக்குடி வீரர்களின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் கோவை கிங்ஸ் அணி வீரர் அபினவ் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆட்டத்தின் 2வது ஓவரில் சாருக்கான் 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் வேவிட்சன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய அனிருத் வந்த வேகத்தில் 2(3) வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த் மொஹமத் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். நிலைத்து நின்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை ஆட்டத்தின் 6.1வது ஓவரில் டேவிட்சன் தனது ஓவரில் மொஹமத் 19 (14) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாக்கினார்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய அந்தோணி தாஸ், ஸ்ரீநாத்துடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை சிறப்பாக குவிக்க துவங்கினர். கோவை அணி 10 ஓவர் முடிவுற்ற நிலையில் 4 விக்கெட்களை இழந்து 112 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டத்தின் 10.2 ஓவர் முடிவில் அந்தோணி தாஸ் 19 பந்துகளை சந்தித்து 6 சிக்ஸ்ர்களை விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்தோணி தாஸ் 63 (26) ஆட்டத்தின் 11.3 வது ஓவரில் சரவணன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீநாத் 32 (21), ரங்கராஜன் 2 (3) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். கடைசியில் ஸ்ரீனிவாஷ், விக்னேஷ் களத்தில் நின்றனர்.
இறுதியில் ஆட்டத்தின் 13 ஓவர் முடிவில் கோவை அணி 7 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தூத்துக்குடி அணி தரப்பில் டேவிட்சன், தமிழ் குமரன் தலா 2 விக்கெட்களும், செந்தில்நாதன், சரவணன் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.