Tamilவிளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட் – காரைக்குடியை வீழ்த்தி மதுரை வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் காரைக்குடி காளை – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அனிருதா மற்றும் ஆதித்யா களமிறங்கினர். அனிருதா 13 ரன்னிலும், ஆதித்யா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் மதுரை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

இதனால் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களை எடுத்தது. மதுரை சார்பில் கிரண் மற்றும் ராஹில் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் கார்த்திக் (0) ரன் எதுவும் எடுக்காமலும், ராஜ் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய அணியின் கேப்டன் சந்திரன் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய கிரண் 12 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 18 ரன்கள் அடித்தார்.

இறுதியில், மதுரை அணி 18.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் காரைக்குடி காளை அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

காரைக்குடி காளை அணி சார்பில் சுனில், மோகன் மற்றும் பப்னா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *