Tamilசெய்திகள்

டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் விற்பனை அதிகரிப்பு!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓட்டல்கள், டீக்கடைகளில் வியாபாரம் அதிகரித்து வருகிறது.

இதேபோல் டாஸ்மாக் மதுக்கடைகளிலும் விற்பனை களைகட்டி வருகிறது. தமிழகத்தில் 5,436 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் தினமும் ரூ.12 லட்சம் வரை விற்பனை செய்யக்கூடிய மதுக்கடைகளும் உள்ளன. ரூ.3 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்யும் கடைகள், ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெறும் கடைகள், ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்கக்கூடிய கடைகளும் உள்ளன.

இந்த கடைகளில் மது விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தேர்தல் கமி‌ஷன் மதுவிற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன் படி ஒவ்வொரு கடையிலும் விற்பனையில் 30 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக விற்பனை நடைபெறக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

ஒரு நபருக்கு 5 பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். பெட்டி, பெட்டியாக மது வாங்கி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.130 கோடி வரை மது விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை ரூ.170 கோடிக்கு மேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காலமாக இருந்ததால், கூலிங் பீர் வாங்குவதை பலர் தவிர்த்து வந்தனர். ஆனால் இப்போது கூலிங் பீர் கேட்டு வாங்கி அருந்துகிறார்கள். இதனால் பீர் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக விற்பனையாளர் தெரிவித்தார்.