Tamilசெய்திகள்

டாஸ்மாக்கில் மிகபெரிய ஊழல் தலைவிரித்து ஆடுகிறது – ஓ.பன்னீர் செல்வம் புகார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதும், இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்து இருப்பதைச் சுட்டிக்காட்டினால், இந்தப் பணம் அவர்களுக்குத்தான் செல்கிறது என்றும், தான் ஒவ்வொரு கடையாக வந்து வாங்கிச் செல்கிறார்கள் என்று கடையில் உள்ள விற்பனையாளர் தெரிவிப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் எத்தனை பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். இந்தக் கூடுதல் வருமானம் யாருக்கு செல்கிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. கள்ளச்சாராய கலாச்சாரத்தை, விஷச்சாராய விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றிருக்கிற நிலையில், அரசே சயனைடு கலந்து மதுவை விற்பனை செய்வது என்பது மக்களை அழித்தொழிக்கும் செயல்.
மொத்தத்தில், டாஸ்மாக்கில் மிகப் பெரிய குளறுபடி, மிகப் பெரிய ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. தமிழக மக்களை அழிப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி போலும்! தமிழ்க் குடியை கெடுக்க வந்த தி.மு.க. அரசிற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.