புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93 வயது) அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்.
இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சாந்தா. அவர் எப்போதும் நினைவுக்கூரப்படுவார். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018-ம் ஆண்டில் நான் சென்னை அடையாறு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றதை நினைவு கூர்ந்து பார்த்தேன். டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓம் சாந்தி’’ எனப்பதிவிட்டுள்ளார்.