X

ஜோஹார் கோப்பை ஹாக்கி – 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணி

6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா அணி 13 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், இந்தியா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிச்சுற்றை எட்டின.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியாவின் சுதீப் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹாலண்ட் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ஷூட் அவுட் முறைக்கு சென்றது. இதில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. போட்டியை நடத்திய மலேசியா புள்ளிப்பட்டியலில் (1 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.