Tamilசினிமா

ஜோதிகா படத்தை பாராட்டிய மலேசிய அமைச்சர்!

கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஜூலை 5ந்தேதி இந்த படம் வெளியானது. ராட்சசி படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் படத்தை பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- 2 மாதங்களுக்கு முன்பாக இந்த படம் வெளியானது. நேற்று இரவு இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன். படத்தைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுவேன். கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இதன் கதை அற்புதமாக இருக்கிறது, கதாபாத்திரங்களும் அருமை. கல்வி அமைச்சராக இந்த படத்தை பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் நம் நாட்டின் சூழலோடு என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி ஒரு பெரிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். பெரிய மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார். நாம் செய்யவேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் இந்த படத்தில் வெற்றிகரமாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இலவச காலை உணவுத் திட்டம். உணவை தாண்டிய சில விஷயங்களை பற்றிய எனது எண்ணங்களை இந்த படம் பிரதிபலிக்கிறது.

ஆனால் நமது குழந்தைகளோடு ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாணவர்கள் படிப்பு நிறுத்தப்படும் பிரச்சனையில் கீதா காவல்துறை மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரையும் இந்த பிரச்சனையைத் தீர்க்க ஈடுபடுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் படிப்பு தடைப்படாமல் இருக்க அனைத்து மூலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

அது மட்டும் இல்லை. கீதா அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்கிறார். குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் கவனமாக இருக்க ஆசிரியோர் பெற்றோர் கழகம் போன்ற ஒன்றை கீதா நிறுவுகிறார். கல்வியை வளர்ப்பதே அனைத்து கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பெரிய விருப்பம்.

ஏனெனில், ஒரு சமூகத்தின் இலக்காகவும் திட்டமாகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கல்விதான் உதவும் என்று நம்புகிறேன். அனைத்து கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், மற்றும் அனைவரும் இந்த படத்தை விரைந்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்’. இவ்வாறு மலேசியக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *