நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 222 நகரங்களில் 1,000 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த தகவலை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 1,50,838 மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய நிலையில், 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்னளர். இவர்களில் 6707 பேர் பெண்கள். ஐஐடி பாம்பே மண்டலத்தின் சிராக் பாலர், பொது தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 396 மதிப்பெண்களுக்கு 352 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பெண்களில் கனிஷ்கா மிட்டல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் 17வது இடத்தை பிடித்துள்ளார்.