Tamilசெய்திகள்

ஜெ.அன்பழகன் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது – மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, தி.மு.கழகம் முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள், சிகிச்சை பலனின்றி இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்.

கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு – மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தை!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *