Tamilவிளையாட்டு

ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்கள் தாயகம் திரும்பினர்

சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்தது. இதில் களம் இறங்க இருந்த வீரர்களில் ஒருவரான நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்‌ஷயா சென்னின் தந்தையும், பயிற்சியாளருமான டி.கே.சென்னுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 28-ந்தேதி கண்டறியப்பட்டது. இதனால் லக்‌ஷயா சென், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் ஆகியோர் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகினர். அவர்கள் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ், உடல்தகுதி நிபுணர் அபிஷேக் வாக் ஆகியோர் பேட்மிண்டன் சம்மேளனத்துக்கும், விளையாட்டு அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானதும் 5 பேரும் விமானம் மூலம் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினர்.

டி.கே.சென் கூறுகையில், ‘நாங்கள் நேற்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்தோம். அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். எனக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்ததால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டோம். 5 நாள் கழித்து ஜெர்மனி அதிகாரிகள் மீண்டும் எங்களை சோதனைக்குட்படுத்தினர். நல்லவேளையாக கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. இதையடுத்து உடனடியாக தாயகம் திரும்பினோம்’ என்றார்.