ஜெய் ஷா மீதான் ரணதுங்காவின் குற்றச்சாட்டு – வருத்தம் தெரிவித்த இலங்கை அரசு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் ஜெய்ஷாவிற்கும் தொடர்புள்ளது என அர்ஜுன ரணதுங்க பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தொலைபேசியில் அழைத்து, ரணதுங்கா கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் நானும், எனது நண்பரான எரிசக்தி துறை மந்திரியுமான காஞ்சனா விஜேசேகராவும் வருத்தம் தெரிவித்தோம் என குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports