ஜெய் ஷாவால் இலங்கை கிரிக்கெட் அழிந்து வருகிறது – முன்னாள் கேப்டன் அர்ஜுன ரனதுங்கா குற்றச்சாட்டு

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள், இறுதிப் போட்டி நடைபெற இருக்கின்றன.

இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் 4 வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தன. 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றிபெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெறாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியதும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டின் அரசு கலைப்பதாக அறிவித்தது. மேலும், இலங்கைக்கு உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த கேப்டன் அர்ஜுன ரணதுங்காவை இடைக்கால தலைவராக நியமித்தது.

கிரிக்கெட் வாரியம் விவகாரத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை இலங்கை அணியால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

இந்த நிலையில் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஜெய் ஷா குறித்து அர்ஜுன ரணதுங்கா கூறுகையில் ”இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு இடையிலான தொடர்பால், அவர்கள் (பிசிசிஐ) இலங்கை கிரிக்கெட் போர்டை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டை ஜெய் ஷா நடத்தி வருகிறார். இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது. ஏனென்றால், ஜெய் ஷாவிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு நபர் இந்தியாவில் இருந்து இலங்கை கிரிக்கெட்டை வழிநடத்தி வருகிறார். அவரது தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்தவராக உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports