ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடி இன்றைக்கு கட்சியின் பொறுப்பை இழந்துள்ளார். அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பெண்கள் குறித்தும் தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று விமர்சித்து பேசினார். எல்லாமே ஓசி என்று கேலியும் கிண்டலுமாக பேசினார். அதனை தமிழகத்தில் முதன் முதலாக கண்டித்தவன் நான் தான்.
அமைச்சரான பொன்முடிக்கு அனைத்தும் ஓசி தான். அவருக்குரிய சலுகைகளை மற்றும் உபசரிப்புகளை எல்லாம் அப்போதே குறிப்பிட்டு நான் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் கூட டெல்லி சென்ற பொன்முடி விமானத்தில் ஓசியில்தான் சென்று வந்தார். இதுவும் மக்களின் வரிப்பணம்.
பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார். எனவே தமிழக மக்கள் படும் பாட்டை முதலமைச்சருக்கு யாராவது விரைவாக எடுத்து தெரிவிக்க வேண்டும். எனவே தான் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை. கடந்த 9-ந்தேதி நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பங்கேற்கவில்லை. காரணம் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி கூறி இருந்தார்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்களை கொண்டு வந்தார்கள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பின்னர் ஒரு கோடி கையெழுத்து என்றார்கள். இதுவெல்லாம் நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது. எனவே தான் இப்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை. பாரதிய ஜனதா மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றினால் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை. அது அவர்களது கட்சி விவகாரம்.
ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். யாரையும் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தியோ சந்திக்க மாட்டார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.