டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அ.ம.மு.க. தனித்தே சந்திக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலை ஜெயலலிதா தனித்தே சந்தித்தார். அவரது பாணியில் இந்த பாராளுமன்ற தேர்தலை தினகரன் தனித்து சந்திக்கிறார்.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையிலும் தினகரன் தனித்தே களம் இறங்கியுள்ளார். திட்டமிட்டபடி பிரசாரத்தை தொடங்கி மக்களையும் சந்தித்து வருகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களையும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களையும் தினகரன் நேற்று அறிவித்தார். ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அரசியலில் ஜெயலலிதா பாணியை தினகரன் மட்டும்தான் பின்பற்றுகிறார். தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். பல நேரங்களில் அவருக்கு உகந்த எண்ணாக 9 போன்ற ஒற்றை இலக்க எண்ணை தேர்வு செய்வார். அதன்படி தினகரனும் ராசி பார்த்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக தலா 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டார்.
சிறிது நேரம் கழித்து 15 பேர் கொண்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் 2-வது பட்டியலை அறிவித்தார்.
ஜெயலலிதா போலவே தினகரனுக்கும் ஆன்மீகத்தில் நம்பிக்கை உண்டு. ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை முதன் முதலில் அறிவிப்பது போன்று தினகரனே முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.