X

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை – சசிகலாவிடம் விசாரணை நடத்த பரிந்துரை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் அவரை பார்த்தது போன்ற புகைப்படங்களோ வெளியாகவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவரவில்லை.

இதனால் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று தெரியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி வாசலிலேயே நாட்கணக்கில் இரவு பகலாக காத்துக்கிடந்தார்கள். இந்த நிலையில் 5.12.2016 அன்று அவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடையும் வரையிலான சந்தர்ப்ப சூழல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது மரணம் மிகப்பெரிய விவாத பொருளாகவும் இருந்தது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் அடையும் வரை துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் சூடு பிடித்தது.

25.9.2017 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அடுத்த 5 நாட்களில் அதாவது 30.9.2017 முதல் விசாரணை ஆணையம் அதிகாரப்பூர்வமாக செயல்படத்தொடங்கியது. விசாரணை ஆணையத்தின் விசாரணை நீண்டு கொண்டே சென்றதால் 14 முறை விசாரணை ஆணையத்துக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு 24-ந்தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த விசாரணை அறிக்கை 608 பக்கங்களை கொண்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

விசாரணை ஆணையம் எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்த மருத்துவ அறிக்கையை கவனத்துடன் ஆய்ந்து பார்த்ததில் எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே அவர்களது கருத்தாக தெரிவித்துள்ளனர் என தெரியவருகிறது. எனவே மருத்துவக்குழுவின் அறிக்கையை விசாரணை ஆணையம் ஏற்கவில்லை.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு வழி வகுத்த சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையது. மறைந்த முதல்-அமைச்சரை தாமதமின்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு போதுமான அக்கறை எடுத்துக்கொண்டது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த சசிகலா உள்ளிட்ட நபர்களின் நடவடிக்கையில் அசாதாரணமான அல்லது இயற்கைக்கு மாறான செயல் எதையும் ஆணையம் கண்டறியவில்லை.

சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம்.

இவ்வாறு ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பற்றி கடந்த 29.8.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் மீது சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை செயலாளரிடம் வழங்கப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.