ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை, என்று கூறியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என்று மிகத்தெளிவாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாக முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உண்மைத் தெரியவரும். ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 4-ந்தேதி யார் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி அன்று மாலையில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கிறோம். வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும்.
2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அந்த மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மாற்றத்தை வரவேற்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.