பெருநகர சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் வார்டு-33, பொன்னியம்மன்மேடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு அவர் முகக்கவசம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா உலகம் போற்றக்கூடிய தலைவர். தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்து இருப்பவர். அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படுவதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த எண்ணம். அ.தி.மு.க.வின் தொண்டர்களும் அதைத்தான் நினைக்கிறார்கள். மாற்றுக்கட்சியினரும் அதையே கூறுகிறார்கள்.
அந்த கோரிக்கையை ஏற்றுதான் அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவர் மறைந்த இடத்தில் நினைவு மண்டபமும் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி எங்களுடைய கடமையும், உரிமையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். ஜெயலலிதாவின் வாரிசுகள் சட்டப்படி சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை மறுபரிசீலனை செய்வார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.
எம்.ஜி.ஆர். சிலைமீது காவித்துண்டு அணிவித்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வாக்குவங்கி அரசியலுக்காக இதுபோன்ற கீழ்த்தரமான செயலை, யார் செய்தாலும் மன்னிக்கமுடியாத குற்றம். அ.தி.மு.க. தொண்டர்களின் மனதை புண்படுத்தக்கூடிய வகையில், இந்த செயலை செய்தவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள். அ.தி.மு.க. வினரை, எம்.ஜி.ஆர். தொண்டர்களை, பக்தர்களை சீண்டினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
ரஜினிகாந்த் இ-பாஸ் இல்லாமல் சென்றது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. அதில் தவறு இருந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று மாநகராட்சி கமிஷனர் சொல்லியிருக்கிறார். 2-வது தடவை இ-பாஸ் வாங்கியிருக்கிறார். எனவே அதில் எந்த கருத்தும் சொல்வதற்கு இல்லை.
உதயநிதி ஸ்டாலின் இதுவரை வெளியூர் சென்று வந்ததற்கான இ-பாஸ் காட்டவில்லை. சட்டத்தை மதித்து சென்றால் நல்லது. சட்டத்தை மதிக்காமல் சென்றால் பிரச்சினைதான். அது அனைவருக்கும் பொருந்தும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். இது சட்டப்படியான அரசு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘ஜெயலலிதாவின் வருமானவரி நிலுவைத்தொகையை அரசு ஏன் செலுத்தவேண்டும்? என்ற கேள்வி எழும்பி இருக்கிறதே?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘ஜெயலலிதா மாபெரும் தலைவர். அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும்போது, அதில் என்னென்ன சிக்கல்கள், பிரச்சினைகள் இருக்கிறதோ? அதை சரிசெய்வது அரசாங்கத்தின் கடமை. அந்தவகையில் தான் அரசாங்கம் அதை செய்துள்ளது. இதில் உள்நோக்கம் பார்க்கவேண்டாம்’ என்றார்.