Tamilசெய்திகள்

ஜெயலலிதா அனாதை போல இருந்தார் – உறவினர் வெளியிட்ட தகவல்

‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் தந்தி டி.வி.யில் நேற்று முதல் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் ஜெயலலிதா பற்றி இதுவரையில் யாரும் அறிந்திராத அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வருகிற வெள்ளிக்கிழமை வரை தந்தி டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

முதல் நாளான நேற்றே ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியானது. இதுவரையில் யாரும் சொல்லாத தகவல்களாக அது இருந்தது.

ஜெயலலிதாவின் சித்தி அமீதா மகள் தெரிவித்த தகவல்கள் உருக்கமாக இருந்தன. ஜெயலலிதாவின் மாமா மகளும் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதா அனாதை போல கிடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். போயஸ் கார்டனில் பணியாற்றிய ராஜம்மா, இனி எனக்கு யார் இருக்கா? என்று கூறியது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. 2016-ம் ஆண்டு செப். 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றி அவரது குடும்ப டாக்டர் சிவக்குமார் விவரித்துள்ள பல்வேறு வி‌ஷயங்களும் உருக்கமாக உள்ளன.

கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடங்களுள் ஒன்றாகும். அங்கு சென்று ஓய்வு எடுப்பதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். அந்த எஸ்டேட் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

2-வது நாளாக இன்று இரவு 9 மணிக்கு ஜெ.ஜெயலலிதா எனும் நான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜெயலலிதாவின் தினசரி வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பது ருசிகர தகவல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டம் இல்லத்தில், பல்வேறு அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இது மட்டுமே பலருக்கு தெரியும்.

ஆனால் ஜெயலலிதா தனது இல்லத்தில் பண்டிகைகளையும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி உள்ளார். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை அவர் சந்தோ‌ஷத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் மகிழ்ச்சியான அந்த தருணங்களை கண்முன்னே நிறுத்தும் வகையில், இன்றைய நிகழ்ச்சியில் இனிமையான நிகழ்வுகள் நினைவு அலைகளாக விரிகின்றன.

ஜெயலலிதாவை பொறுத்தவரையில் மிகவும் தைரியமான பெண் ஒன்று பெயரெடுத்தவர். எதற்கும் பயப்படமாட்டார் என்பதை உணர்த்தும் வகையில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

ஒருமுறை ஜெயலலிதாவின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட பயந்து நடுங்கி உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவோ அந்த பாம்பை கண்டு கொஞ்சமும் பயப்படாமல் இருந்துள்ளார். அந்த சம்பவமும் இன்றைய நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் ஜெயலலிதா. குரங்குகள், நாய்க்குட்டிகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்துள்ளார்.

வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி திடீரென இறந்து போனதால் தனது டெல்லி நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளார் ஜெயலலிதா. இதுபற்றிய தகவல்களும் நிகழ்ச்சியில் பாசமழையாக பொழிய உள்ளது.

அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா முதன்முதலில் பேசிய வார்த்தை என்ன? என்பது அனைவரது மனதிலும் இப்போது வரையில் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இதற்கும் இன்றைய நிகழ்ச்சி விடை தருகிறது.

கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி தரிசனம் செய்த போது ஒரு முறை சன்னதியில் கதறி அழுதுள்ளார்.

சந்தோ‌ஷமான தருணம் ஒன்றில் கருணாநிதி குரலிலும் ஜெயலலிதா மிமிக்ரி செய்து பேசிக் காட்டியுள்ளார். இதன் மூலம் அவரது மிமிக்ரி ஆற்றலும் வெளிப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டியவர் ஜெயலலிதா. மோடிக்கு அவர் அளித்த விருந்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இனிப்பு வகைகள் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இரவில் குறிப்பிட்ட இனிப்பு ஒன்றை அவர் விரும்பி கேட்டு சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். அது என்ன இனிப்பு? ஜெயலலிதாவின் விருப்ப உணவுகள் என்ன? என்பது போன்ற தகவல்களும் இன்றைய நிகழ்ச்சியில் ஆச்சரியமூட்டும் வகையில் இடம் பெற்றுள்ளது.

தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவின் வாழ்வில் யாரும் அறிந்திராத இன்னொரு பக்கத்தை பார்க்க முடிகிறது என்றால் அது மிகையல்ல.

இதே போல நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும், அதன் பின்னர் 6, 7-ந்தேதிகளில் வர இருக்கும் நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளன.

இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு மறுநாள் மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *